நித்தியானந்தா ஆசிரமத்துக்கு தமிழக அரசு நோட்டீஸ்
கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 30 அக்டோபர், 2012 - 14:44 ஜிஎம்டி
தமிழக அரசின் அறநிலையத்துறை திருவண்ணாமலையிலுள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகி மதுரை ஆதீன இளைய பீடாதிபதிப் பொறுப்பினையும் அண்மையில் துறக்க நேர்ந்த நித்தியானந்தா கடந்த ஆறு ஆண்டுகளாக திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆசிரமம் ஒன்றை நடத்திவருகிறார்.
இந்நிலையில் உதவி அறநிலையத்துறை ஆணையர் எம்.ஜோதி, "ஆசிரமத்தில் வழிபாடு தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பொதுமக்கள் வழிபடும் கோயில்களை தனி நபர்கள் சொந்த செலவில் உருவாக்கி நிர்வகித்தாலும், அறநிலையத்துறை அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டத்தில் இடமுள்ளது. அந்த அடிப்படையில் நித்யானந்தாவின் ஆசிரமத்தை ஏன் அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரக்கூடாது" எனக் கேட்டு தாக்கீது அனுப்பியிருக்கிறார்.
"நித்தியானந்தா ஆசிரம நடவடிக்கைக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டுகிறார், அதற்கு முறையாக கணக்கு எதுவும் இல்லை, கையாடல் நடந்திருக்கிறது எனப் புகார்கள் வந்த நிலையிலேயே அவருக்குத் தாக்கீது அனுப்பப்பட்டிருக்கிறது, வேறு உள்நோக்கம் எதுவும் கிடையாது" என உயர் அதிகாரி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
தாக்கீதுக்கு பதிலளிக்க அளிக்கப்பட்டிருந்த அவகாசமான 15 நாட்கள் நேற்று திங்கட்கிழமை நிறைவுபெற்ற நிலையில், நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் கோரியபடி மேலும் 15 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் விளக்கங்களைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எனவும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.bbc.co.uk/tamil/india/2012/10/121030_nithyananda.shtml
No comments:
Post a Comment