மதுரை : மோதல் விவகாரம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விட்டதால் நித்யானந்தா வழக்கில் சிக்காமல் தப்பிக்க மதுரை ஆதீன மடத்தில் இருந்து அபகரித்து சென்ற 169 தங்க காசுகளை ஆதீனத்திடம் ஒப்படைத்தார். இதன் பிறகு ஆதீனம் தன்னிடம் இருந்த தங்க மோதிரங்கள், கிரீடம், செங்கோலை நித்யானந்தா சீடரிடம் திருப்பி கொடுத்தார்.
மதுரை ஆதீன வாரிசு பதவியில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குரிய கட்டில், சொகுசு மெத்தை, ஆடம்பர பொருட்கள் 3 லாரிகளில் பெங்களூருக்கு அனுப்பப்பட்டன. தங்க மோதிரங்கள், கிரீடம், வெள்ளிச் செங்கோல் உள்ளிட்ட பொருட்களை அனுப்பாமல் மடத்தில் ஆதீனம் வைத்திருந்தார்.
இதைக் கேட்டு நித்யானந்தா தனது சீடர்களை ஆதீன மடத்திற்கு அனுப்பினார். இதற்கு ஆதீனம், “எனது கனகாபிஷேகத்தின்போது எனக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தங்க காசுகளை நித்யானந்தா அள்ளிச் சென்றுள்ளார். அந்த தங்க காசுகளையும், பென்ஸ் கார் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்தால் தான், கிரீடம், செங்கோல், மோதிரங்களை தருவேன்Ó என்று நிபந்தனை விதித்தார். இதனால் ஆதீனம், நித்யானந்தா இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை விளக்கு தூண் போலீசில் இரு தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆதீனம், “தங்க காசுகளை நித்யானந்தா உடனே ஒப்படைக்க வேண்டும், அதன் பிறகு என்னிடமுள்ள அவரது பொருட்களை திருப்பி கொடுக்க தயாராக இருக்கிறேன். மீறினால் மதுரை ஆதீன மடத்தில் இருந்து தங்ககாசுகளை அபகரித்து சென்று விட்டதாக நித்யானந்தா மீது போலீசில் எழுத்து பூர்வமாக புகார் அளிப்பேன்Ó என்றார்.
ஏற்கனவே பாலியல் புகாரில் சிக்கியுள்ள நிலையில், ஆதீனம் ஒரு புகார் அளித்தால் அந்த வழக்கிலும் நித்யானந்தா சிக்கும் நிலை உருவானது. இதிலிருந்து தப்பிக்க நித்யானந்தா தனது முடிவை மாற்றிக் கொண்டார். நேற்று முன்தினம் இரவு அவசரமாக தனது சீடர் ரிஷிதயாவிடம் 169 தங்க காசுகள், பென்ஸ் கார் ஆகியவற்றை மதுரைக்கு அனுப்பி வைத்தார். இதை மடத்தில் ஆதீனத்திடம் ரிஷிதயா ஒப்படைத்தார். வாரிசு நியமன ஆவணம் பெங்களூரு நீதிமன்றத்தில் இருப்பதால் பின்னர் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.
இதன் பிறகு மடத்தில் தன் பொறுப்பில் வைக்கப்பட்டு இருந்த நித்யானந்தாவுக்குரிய 15 தங்க மோதிரங்கள், கிரீடம், வெள்ளி செங்கோல், ருத்ராட்ச காதணி, தங்க முலாம் பூசப்பட்ட காலணி, 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை நித்யானந்தா அனுப்பிய சீடர் ரிஷியிடம் திருப்பி கொடுத்தார். இந்த பரிமாற்றங்கள் ஆதீன மடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆதீன மடத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=29385
No comments:
Post a Comment