நித்தியானந்தா ஆண்மை சோதனைக்குச் செல்வாரா... மாட்டாரா என்பது இந்த இதழ் உங்கள் கைகளில் தவழும் நேரத்தில் தெரிந்துவிடும்.
ஹரித்துவாரில் தங்கியிருக்கும் நித்தியானந்தா, அங்கிருந்தபடியே வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை நித்தியானந்தா ஆண்மை பரிசோதனைக்காக பெங்களூரு மருத்துவமனைக்குப் போனால், அங்கே அவருக்கு என்ன சோதனைகள் நடத்துவார்கள்? ஆண்மை சோதனை என்றால் என்ன? அதற்கு நித்தியானந்தா ஒத்துழைப்பாரா? இப்படி பல சந்தேகங்களுக்கும் விடை தேடினோம்.
முதலில் ஆண்மை சோதனை எப்படி நடத்துவார்கள் என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் நாராயண ரெட்டியிடம் பேசினோம். ''குழந்தை இல்லாத தம்பதியர் எங்களிடம் வரும்போது, முதலில் ஆணுக்கு அவருடைய விந்துக்களில் உயிரணுக்களின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கிறது என்பதைப் பார்ப்போம். இதற்காக ஆணின் விந்து சாம்பிள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவோம். அதில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையை வைத்து அவருக்கு மேற்கொண்டு என்ன சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்வோம். சிலர் இதனை ஆண்மை பரிசோதனை என்று தவறாகப் புரிந்துகொண்டு இருக்கிறார்கள். இது ஆண்மை பரிசோதனை இல்லை. சொல்லப்போனால் ஆண்மை பரிசோதனை என்ற ஒன்றே நடத்த முடியாது.
இப்போது ஆண்மை பரிசோதனை என்ற பெயரில் நடக்கும் சோதனைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி நடக்கும் ஆண்மை சோதனைக்கு பீனைல் டாப்லர் (Penile Doppler) என்று பெயர். இந்த சோதனையின்போது ஆண் உறுப்பில் ஒரு இன்ஜக்ஷன் போடப்படும். அப்படி ஊசிபோட்டதும் ரத்த நரம்புகளில் ரத்தம் பீறிட்டுச் செல்லும். இதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மைக்கு மாறும். ஒருவேளை ஆண் உறுப்புக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், ஊசி போட்டாலும் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடையாது. அப்படி விறைப்புத் தன்மை அடையவில்லை என்றால், அவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். இதுதான் இப்போது நடக்கும் ஆண்மை சோதனையாக இருக்கிறது. ஆனால், அவருக்கு உடம்பு சரியாக இருக்கிறதா என்பதை வேண்டுமானால் இந்தச் சோதனையை வைத்துச் சொல்லலாமே தவிர அவரை ஆண்மை இல்லாதவர் என்று முடிவு செய்துவிட முடியாது.
ஹோமோ செக்ஸ் பழக்கத்தில் ஈடுபடும் ஆண்களுக்குப் பெண்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்களிடம் நெருங்கவும் மாட்டார்கள். அவர்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று சொல்லிவிட முடியுமா? அவர்களால் செக்ஸில் ஈடுபட முடியும். ஆனால், துணைக்குப் பெண் தேவை இல்லை. இன்னொரு ஆண் வேண்டும். ஆனாலும் இதையெல்லாம் நீதிமன்றங்கள் ஏற்பது இல்லை. நீதிமன்றத்தைப் பொறுத்தவரை, ஆண் உறுப்பில் ஊசிபோட்டு அதனால் ஆண் உறுப்பு விறைப்புத் தன்மை அடைந்தால் போதும். அவனை ஆண்மை உடையவனாக ஏற்றுக்கொள்ளும்'' என்று சொன்னார்.
அதாவது, இந்த மாதிரியான சோதனையைத்தான் நித்தியானந்தாவிடம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு அவர் 6-ம் தேதி ஆஜராக வேண்டும்.
மனநல மருத்துவர் டி.வி.அசோகனிடம் பேசினோம். ''செக்ஸ் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அதற்கு மனதும் ஒத்துழைக்க வேண்டும்.
இன்னும் சிலரை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஆணாக இருப்பார். ஆனால், அவரிடம் பெண்மை கலந்த குணம் நிறைய இருக்கும். அது அவர்களின் பழக்க வழக்கங்களால் வருவது. அதற்கும் ஆண்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களால் செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும். செக்ஸ் புகார்கள் வரும்போது நீதிமன்ற அனுமதியுடன் மட்டுமே ஆண்மை பரிசோதனை நடத்தப்படுகிறது. 'உண்மையான காதல் கடிதம் இதுவரை எழுதப்படவில்லை’ என்று கவிஞர் ஒருவர் சொன்னதைப்போலத்தான் இந்த ஆண்மை பரிசோதனையும். இதுவரை முழுமையான ஆண்மை பரிசோதனை என்று எவரும் செய்தது இல்லை. இதில் உறுப்புக்கள் சரியாக இருக்கிறதா... ஹார்மோன்கள் சரியாக இருக்கிறதா என்றெல்லாம் சோதனை செய்வார்கள். ஆனால், மனசு சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு என்ன செய்ய முடியும்?'' என்கிறார்.
''ஆண்மை பரிசோதனைக்கு உட்படுத்தி அதில் எந்தவிதமான முடிவு வந்தாலும் அது தனக்கு எதிராகவே இருக்கும் என்று நித்தியானந்தா நினைக்கிறார். ஆண்மை இல்லாதவர் என்று சொன்னால், அவர் மற்றவர்களின் ஏளனப் பேச்சுக்கு ஆளாக நேரிடும். ஆண்மை உள்ளவர் என்றால், அவரைப் பற்றிய பாலியல்ரீதியிலான புகார்களை விசாரிக்கக் கோரி சில அமைப்புகளும், நித்தியானந்தாவுக்கு எதிராகக் களம் இறங்கியிருப்பவர்களும் குரல் கொடுப்பார்கள். இதனால், மறுபடியும் சிக்கல் வரும். அதனால், முடிந்தவரை ஆண்மை சோதனைக்குச் செல்லாமல் இருக்க என்ன வழி இருக்கிறது என்று தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதுமட்டுமல்ல... ஆண்மை சோதனைக்காகப் போடப்படும் ஊசி கடுமையான வலியைக் கொடுக்கும். சுவாமிக்கு ஊசி என்றாலே அலர்ஜி'' என்று சொல்கிறார்கள் நித்தியானந்தரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள்.
நித்தியானந்தா ஆசிரம தரப்பில் பேசுபவர்களோ, ''சுவாமி நீதிமன்ற உத்தரவுக்கு நிச்சயம் கட்டுப்படுவார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது அது தொடர்பாகப் பேசக்கூடாது என்பதால்தான், மீடியாவில் பேசாமல் தவிர்த்து வருகிறார். ஹரித்துவாரில் தினமும் பக்தர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறார். தமிழகத்திலும் விரைவில் பல்வேறு இடங்களில் சுவாமி உரை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளார். சுவாமியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் சிலர் வேண்டும் என்றே தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். அவற்றை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்கிறார்கள்.
தன் பக்தர்களுக்கு ஆனந்தத்தையும், அமைதியையும் கொடுப்பதாகச் சொல்லும் நித்தியானந்தா நிம்மதியை இழந்துத் தவிக்கிறார்!
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97564&r_frm=news_related
No comments:
Post a Comment