திருவண்ணாமலை, செப்.11–
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தாவுக்கு பெங்களூரில் கடந்த திங்கட்கிழமை ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து பிடதி ஆசிரமத்தில் சீடர்களிடம் பேசிய நித்யானந்தா பெங்களூர் போலீசார் மற்றும் டாக்டர்கள் தன்னை அவமதித்து விட்டனர். இதனால் “பிடுதி தியான பீடத்தை திருவண்ணாமலைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன்.
ஒட்டுமொத்தமாக அனைத்தும் இங்கிருந்து மாற்றப்படுகிறது. தினமும் நடைபெறும் பூஜைகள் உள்பட அனைத்தும் திருவண்ணாமலையிலேயே நடைபெறும்.
இந்த பிடுதி தியான பீடம் தொடர்ந்து செயல்படும். இனிமேல் நான் வழக்கு சம்பந்தமான விஷயங்களுக்காக மட்டுமே பெங்களூர் வருவேன்“ என்றார்.
நித்யானந்தா திருவண்ணாமலையில் குடியேற போவதாக அறிவித்துள்ளதை இந்து முன்னணி வரவேற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் கட்சி நிறுவனர் சிவபாபு கூறும்போது:–
நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வருவதை எதிர்க்கவில்லை, ஆனால் கிரிவலப் பாதையில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவதை ஏற்க முடியாது.
பழைய இடத்தில் ஆசிரமம் தொடங்கினால் அந்த இடத்தை இந்து சமய அறநிலையத்துறை கைப்பற்ற வேண்டும். ஆசிரமம் அமைக்க மாவட்ட நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
கிரிவலப் பாதைக்கு வெளியே வேறு எந்த இடத்திலும் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க எங்களுக்கு எந்த தடையும் இல்லை என்றார்.
அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் நித்யானந்தா திருவண்ணாமலை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணி தலைவர் சங்கர் கூறுகையில்:–
திருவண்ணாமலையில் நித்யானந்தா வெளிப்படையான ஆன்மீக பணி மேற்கொள்வார். இதனை வரவேற்கிறோம். அவருக்கு முழு ஒத்துழைப்பு, பாதுகாப்பு வழங்குவோம் என்றார்.
திருவண்ணாமலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் உள்ள போர்டுகள் மாற்றும் பணி நடக்கிறது.
பிடதி ஆசிரமத்தில் உள்ள அனைத்து வசதிகளும் திருவண்ணாமலை ஆசிரமத்தில் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அங்குள்ள மைதானம் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
http://www.maalaimalar.com/2014/09/11095841/tiruvannamalai-various-organiz.html
No comments:
Post a Comment