கொந்தளிக்குக்ம் கர்நாடகா...
அடுத்த சர்ச்சைக்கு அடித்தளம் அமைத்திருக்கிறார் நித்தியானந்தா!
பெங்களூரில் உள்ள 'சமயா’ என்ற லோக்கல் சேனலில் ஹரித்துவாருக்கு யாத்திரை சென்ற சிலரது பேட்டி ஒளிபரப்பானது. அந்தப் பேட்டியில், ''யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம் நடத்துவதற்காக ஹரித்துவாரில் உள்ள சரோவர் ஹோட்டலில் நித்தி யானந்தாவும் அவரது சிஷ்யர்களும் தங்கியிருக்கிறார்கள். ஹரித்துவாருக்கு டூரிஸ்ட்களாக சென்ற நாங்கள் சரோவர் ஹோட்டல் மேனேஜர் பிரிஜேஷ் குமாரிடம் ரூம் கேட்டோம். இதைக் கவனித்த நித்தியானந்தா, 'கன்னடர்களை இங்கே தங்க அனுமதிக்கக் கூடாது’ என்று சொன்னார். அவர் சொன்னதால் எங்களுக்கு ரூம் கொடுக்கவில்லை'' என்று சொன்னார்கள்.
இந்தப் பேட்டி ஒளிபரப்பானதும் சில கன்னட அமைப்புகள் நித்தியானந்தாவுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கின. 'இனி, நித்தியானந்தா கர்நாடகாவுக்குள் வரக்கூடாது’ என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்திய கர்நாடக ஜனப்ரா வேதிகா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கவுடா, ''எங்களுக்கும் நித்தியானந்தாவுக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. தன்னை கடவுள் என்றும், சிவன் என்றும் நித்தியானந்தா சொல்லிவருவது இந்து மதத்துக்கே பெருத்த அவமானம். இப்படிப்பட்டவர் ஹரித்துவாரில் உள்ள ஹோட்டலில் கன்னடர்களுக்கு ரூம் கொடுக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு வாழ்க்கைக் கொடுத்தது கர்நாடகா. அவரது ஆசிரமம் இருப்பது கர்நாடகா. இப்படி கர்நாடகாவை நம்பிப் பிழைக்கும் நித்தியானந்தா கர்நாடக மக்களையே கேவலப்படுத்தி இருக்கிறார். இனி நித்தியானந்தா எப்படி கர்நாடக மண்ணில் கால் வைக்கிறார் என்பதை நாங்களும் பார்க்கிறோம். நாங்கள் தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. சாமியார் என்ற போர்வையில் கர்நாடக மக்களை ஏமாற்றுபவர்களைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டோம்'' என்று கொந்தளித்தார்.



ஹரித்துவாரில் உள்ள சரோவர் ஹோட்டல் மேனேஜர் பிரிஜேஷ் குமாரைத் தொடர்புகொண்டு பேசினோம். ''கர்நாடகாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியில் எங்களது ஹோட்டலைப் பற்றி தவறான தகவல் வெளியாகியுள்ளது. ஊரைப் பார்த்து நாங்கள் யாருக்கும் அறை கொடுப்பது கிடையாது. யார் வேண்டுமானாலும் எங்கள் ஹோட்டலுக்கு வரலாம். அவர்களது அடையாள அட்டையைக் காட்டினால் நிச்சயம் ரூம் கொடுப்போம். நித்தியானந்தா எங்கள் ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறார். அவர் சொல்லி, கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு நாங்கள் ரூம் கொடுக்கவில்லை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது'' என்று சொன்னார்.
நித்தியானந்தா தியான வகுப்புகளை முடித்துக்கொண்டு கர்நாடகா திரும்பும்போது பிரச்னை வெடிக்கத் தயாராக இருக்கிறது!
- http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91542