கே.கே.மகேஷ்
படங்கள்: கிருஷ்ண மூர்த்தி & பா.காளிமுத்து 1980 ஆண்டில் இருந்து தொடர்ந்து 33 ஆண்டுகளாக மதுரை ஆதீனமாகப் பொறுப்பில் இருக்கும் அருணகிரிநாதர்,பல நல்ல விஷயங்களைச் செய்து வந்தார். முதல் 23 ஆண்டுகளில் சுமார் ஆயிரம் கோயில்களில் இவர் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.ஏராளமான பள்ளி, கல்லூரி, கோவில் நிகழ்ச்சிகளில்,இவர் சொற்பொழிவாற்றி இருக்கிறார்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இவர் தொட்டதெல்லாம் சொதப்பல் தான்.
நீக்கப்பட்ட வாரிசு
வயதாவதைக் கருத்தில் கொண்டு,நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுவாமிநாதன் என்ற இளைஞனை தன்னுடைய வாரிசாக அறிவித்தார் ஆதீனம்.அந்த இளைஞனோ முழு துறவறம் மேற்கொள்ளாமல் தன் குடும்பத்தினரோடு தொடர்பில் இருந்தார்.
ஆதீனச் சொத்துக்களை அபகரிப்பதற்காக,அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டு தன்னையே ஒழித்துக் கட்ட அவர் திட்டமிடுவதாக மதுரை ஆதீனத்துக்குத் தகவல் வந்தது.அரண்டு போன ஆதீனம் அவரை உடனே பதவியில் இருந்து நீக்கினார்.சுவாமிநாதனையும், அவரது குடும்பத்தினரையும் மடத்தை விட்டே விரட்டி அடித்தார்.
ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு,ஆதீனம் தன் நிழலைக் கூட நம்ப மறுத்தார்.ஆதீனத்தில் ஆங்காங்கே ஆன் செய்யப்பட்ட'மைக்'குகளை பொருத்தினார்.அதன் உதவியுடன் தனது அறையில் இருந்தபடியே,ஊழியர்களும்,பக்தர்களும் தன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று ஒட்டுக் கேட்க ஆரம்பித்தார்.இன்றளவும் அந்த மைக்குகள் செயல்பாட்டில் உள்ளன.தொழில்நுட்பம் வளர்ந்ததும்,ஆங்காங்கே சி.சி.டி.வி. கேமிராக்களை வைத்து,மானிட்டர் மூலம் கண்காணிக்க ஆரம்பித்தார்.
சுவாமிநாதன் நீக்கம் பற்றி ஒருமுறை பத்திரிகையாளர்களிடம் விளக்கிய ஆதீனம், "அவனை பண்ணத்தெரு பன்னகாபரமேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு பூஜை, வழிபாட்டிற்காக அனுப்பி வைத்திருந்தேன்.ஆனால், அவன் அங்கிருந்த மேலாளரிடம்,'ஆதீனம் பெயரில் வங்கியில் எவ்வளவு இருக்கிறது? கோவில் நகைகள் எவ்வளவு இருக்கிறது?'என்றெல்லாம் கேட்டிருக்கிறான்.'அதை உங்களிடம் சொல்வதற்கு எனக்கு இன்னும் உத்தரவு வரவில்லை'என்று மேலாளர் பதில் சொல்லியிருக்கிறார்.
உடனே அவனும், அவனது குடும்பதினர்களும் '16ம் தேதி வரை தான் நீங்க. அதுக்கப்புறம் எல்லாம் மாறிடும். உங்களுக்குப் பதில் வேற மேனஜர்... ஞாபகம் இருக்கட்டும்!' என்று மிரட்டியிருக்கிறார்கள். ஆக, ஏதோ சதி நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.ஒரு சாமியாரை விஷ ஊசி போட்டுக் கொலை செய்ய சதி நடந்ததே,அதைப் போல. அதனால்தான் அவனை உடனே நீக்கினேன்" என்று சொன்னார்.
இதனால், அவர் ஊழியர்களின் பேச்சை ஒட்டுக் கேட்பதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை.
காமெடி அவதாரம்வயதாக வயதாக இவரது பேச்சில் குழந்தைத் தனம் தென்பட ஆரம்பித்தது.இவரது சீரியஸான பேச்சு கூட

காமெடியாக புரிந்து கொள்ளப்பட்டது.வாரப்பத்திரிகைகள் தங்கள் 'காமெடி ஸ்பெஷல்' இதழ்களுக்கு முதலில் 'பிக்ஸ்' செய்வது இவரது பேட்டியைத்தான்.
எந்தக் கேள்வி கேட்டாலும், 'தெரியாது... கருத்துச் சொல்ல விரும்பவில்லை' என்ற பதிலையே சொல்ல மாட்டார். 'நான் ஐ.ஜி. ஆப் ஐ.ஜி.ஸ்...அதனால் தான் சைரன் வைத்த காரில் போகிறேன், '2012ல் உலகம் அழிந்துவிடும்'என்றெல்லாம் சிரிக்காமல் பேட்டி கொடுப்பார். அதனால், பத்திரிகைகள் இவரைக் கொண்டாடின.
என்.நடராஜனுடன் (அதாங்க... சசிகலா நடராஜன்) சேர்ந்து இவர் அடித்த லூட்டிகள் கணக்கற்றவை.இதனால்,வாசகர்களும் ஆதீனம் பேட்டி என்றால், ஆர்வத்தோடு படிக்க ஆரம்பித்தார்கள்.
புகழ் போதையும்,பெண் அறிமுகமும்
நாளடைவில், புகழ் போதைக்கு அடிமையானார் ஆதீனம்.தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி பத்திரிகையில் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, எல்லா நிகழ்ச்சிகளிலும் தலைகாட்ட ஆரம்பித்தார்.'பவர் ஸ்டார்' சீனிவாசனின் 'லத்திகா' திரைப்படம் மதுரையில் வெளியாகவே இல்லை.ஆனால், அந்தப் படத்தின் 200வது நாள் விழா மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் பிரமாண்டமாக நடந்தது.துணை நடிகைகளின் கவர்ச்சி ஆட்டம் களை கட்டிய அந்த விழாவில் கலந்து கொண்டார் ஆதீனம். அப்போதுதான் சீனிவாசனை முதன் முதலில் சந்தித்தார். ஆனாலும், சீனிவாசனைப் புகழ்ந்து சுமார் 20 நிமிடம் பேசி, 'பவர் ஸ்டாருக்கெல்லாம் பவர் ஸ்டார் நான்'என்று புரிய வைத்தார் ஆதீனம்.
இதற்கிடையே, கச்சனம் ஸ்ரீ கைச்சின்னேசுவர சுவாமி திருக்கோயில் பணியாளர் ஒருவர்,தன் மனைவி கமலாவைப் பிரிந்து சென்றுவிட்டார்.கமலாவோ தொடர்ந்து கோவிலை கூட்டிப் பெருக்குவது என்று தொண்டு செய்து கொண்டிருந்தார். எப்போதாவது கோவிலுக்கு வரும் மதுரை ஆதீனத்திடம் மனம் கோணாமல் நடந்து கொண்டார் கமலா. அவரது அன்பு உபசரிப்பில் மயங்கிய ஆதீனம், ஒரு கட்டத்தில் அவரது வீட்டிற்கே செல்ல ஆரம்பித்தார்.அவரது மகள்கள் வைஸ்ணவி, கஸ்தூரியின் மேற்படிப்புக்கு உதவினார்.இதை உள்ளூர் மக்கள் தவறாக விமர்சிக்க,கண்ணைக் கசக்கினார் கமலா.ஒரு கட்டத்தில், கமலாவைத் தன்னோடு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார் ஆதீனம்.பின்னாலேயே வைஸ்ணவியும் மதுரை வந்துவிட்டார்.
நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்
இதுபோன்ற செயல்களால் சிலர் ஆதீன மடத்தில் வைத்தே அவரைக் கிண்டல் செய்ய ஆரம்பிக்க,அதை 'மைக்' மூலம் ஒட்டுக்கேட்ட ஆதீனம் அப்செட் ஆனார். தன்னைப் பார்க்க வரும் பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டியவை என்று சில
விதிமுறைகளை வகுத்தார்.அதற்கு ஆதீனச் சம்பிரதாயங்கள் என்று பெயரும் வைத்தார்.
"சன்னிதானத்தின் காலடியில் வீழ்ந்து வணங்க வேண்டும்.அவரோடு பேசும் போது 'சரி' என்ற சொல்லைப் பயன்படுத்தவே கூடாது.'உத்தரவு' என்றே சொல்ல வேண்டும்.சன்னிதானம் கொஞ்சம் அதிகமாகத்தான் பேசுவார்.அதற்காக இடையிலேயே நீங்கள் புறப்பட்டுவிடக் கூடாது.சன்னிதானம் எப்போது உத்தரவு கொடுக்கிறாரோ அதன் பின்னரே புறப்படத் தயாராக வேண்டும்.போகும் போது, அவருக்குத் தன் பின்பக்கத்தைக் காட்டக் கூடாது.முகம் அவரை நோக்கி இருக்குமாறு பின்னோக்கி நடந்து செல்ல வேண்டும்"என்று ஆதீனச் சம்பிரதாயங்கள் நீண்டு கொண்டே போனது."தன்னைப் பார்க்க வரும் அனைவரும் தரையில் தான் உட்கார வேண்டும்.சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட வேண்டும்"என்றும் அடம்பிடிக்க ஆரம்பித்தார் ஆதீனம்.
தடுமாறிய ஆதீனம்...உள்ளே புகுந்த நித்தியானந்தாபோதை இருந்தால் தடுமாற்றமும் இருக்கத் தானே செய்யும்.மதுரை ஆதீனத்தின் புகழ் போதையை புரிந்து கொண்டு,அவரைப் பிடதி ஆசிரமத்துக்கு வரவழைத்து தன்னுடைய சாம்ராஜ்யத்தைச் சுற்றிக் காட்டினார் நித்தியானந்தா.
இதேபோல் உலகமெங்கும் தனக்கு ஆசிரமங்கள் இருப்பதாக கதை அளந்தார்."நீங்கள் சம்மதித்தால்,மதுரை ஆதீனத்துக்கும் உலகமெங்கும் கிளைகளை ஏற்படுத்துகிறேன்.அதற்காக 100 கோடி ரூபாய் நன்கொடை தருகிறேன்" என்று ஆசை வார்த்தை காட்டினார். நித்தியானந்தாவின் இனிக்கும் பேச்சையும்,அவரைச் சுற்றி இருந்த கூட்டத்தையும் பார்த்து தடுமாறினார் ஆதீனம்.
அது அவர் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்யக் காரணமாகப் போய்விட்டது. நித்தியின் வருகையும், அதன் பிறகு மதுரையில் நடந்த களேபரங்களும் ரொம்பவே சுவாரஸ்யமானவை. அவற்றைச் சுருக்கமாக நாளை பார்க்கலாம்...