ஆண்மை பரிசோதனை குறித்த மனு மீதான விசாரணையில் சாமியார் நித்தியானந்தா கர்நாடக மாநிலம் ராம் நகர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.
கடந்த 2011-ம் ஆண்டு நித்தியானந்தா மீது அவரது முன்னாள் பக்தை ஆர்த்தி ராவ் ராம் நகர் மாவட்ட போலீஸில் பாலியல் பலாத்கார‌ புகார் அளித்தார். இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் அடைக்கப்பட்டார். நித்தியானந்தா மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவாகியுள்ளதால் அவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவெடுத்தனர். இதற்கு நித்தியானந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோரி ராம் நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீஸார் மனு செய்தனர்.
இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூலை 16-ம் தேதி நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது.
இதனிடையே, 'தனக்கு ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்கக்கூடாது' என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
குற்றவாளி கூண்டில்
இதனிடையே இந்த வழக்கு ராம் நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஹொசகவுடர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நித்தியானந்தா நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆனார். மேலும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது சீடர்கள் தனசேகர், கோபால்ரெட்டி ஷீலம், சிவ வல்லபா, ராகினி வல்லபனேனி ஆகியோரும் ஆஜர் ஆனார்கள். இவர்கள் 5 பேரும் நீதிமன்ற பணிகள் முடியும் வரை (40 நிமிடங்கள்) குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டனர்.
அப்போது நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது பற்றி நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிபதி ஹொச கவுடர் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
நித்தியானந்தா மீது கன்னட அமைப்புகளும், பொது மக்களும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் நீதிமன்றத்துக்கு வெளியே குழுமி இருந்த கன்னட அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.​