வாரணாசியிலிருந்து வெளியேறினார் நித்யானந்தா: பெண்கள், மாணவர்கள் எதிர்ப்பால் ஓட்டம்
வாரணாசி: பிரபல சாமியார் நித்யானந்தாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாரணாசியில் பெண்கள் அமைப்பினர் மற்றும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நித்யானந்தா தன் ஆன்மிக நிகழ்ச்சிகளை பாதியில் ரத்து செய்து விட்டு, வாரணாசியை விட்டு வெளியேறினார். சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, உ.பி., மாநிலம், வாரணாசியில், 21 நாள் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு, சில தினங்களுக்கு முன் அங்கு சென்றார். அவரின் ஆதரவாளர்கள், நகரின் முக்கிய பகுதிகளில், நித்தியின் படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்களை வைத்து விளம்பரப்படுத்தினர். செக்ஸ் புகார் உட்பட, பல சர்ச்சைக்கு ஆளான நித்தியின் வருகையால், ஆத்திரமடைந்த மகளிர் அமைப்பினர், பனாரஸ் பல்கலைக்கழக மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைகளில் வைக்கப்பட்டிருந்த, நித்தியின் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், பிளக்ஸ் பேனர்களை அடித்து நொறுக்கியும், தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 'புனித நகரமான வாரணாசியை விட்டு, நித்தி உடனடியாக வெளியேற வேண்டும்' என, மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.போராட்டம் தீவிரம் அடைந்ததால், நான்கு நாட்களுக்குள், நித்யானந்தாவை வாரணாசியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உதவி கலெக்டர் உறுதியளித்தார். இந்நிலையில், நித்யானந்தா, ஆன்மிக நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு, தன் சீடர்களுடன் வாரணாசியை விட்டு நேற்று வெளியேறினார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம், எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
Credit: Dinamalar News
No comments:
Post a Comment